அமெரிக்காவின் சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பு; வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கடும் கண்டனம்
கராகஸ்: வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுலா மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்துள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் (69) ஆகியோர் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.
பதவியேற்ற பின்னர் அவர் கூறியதாவது:
“நான் துக்கத்தில் இருக்கிறேன். எங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்புக்குப் பிறகு, வெனிசுலா மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். இரண்டு ஹீரோக்கள் கடத்தப்பட்டுள்ளனர்,” என்றார்.
டெல்சி ரோட்ரிக்ஸ் யார்?
56 வயதான டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலாவின் துணை அதிபராக பணியாற்றியவர்
1970-களில் புரட்சிகர லிகா சோஷலிச கட்சியை நிறுவிய ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸின் மகள்
அதிபர் மதுரோவின் தீவிர விசுவாசி; பொதுமக்களிடையே தனி செல்வாக்கு பெற்றவர்
கராகஸில் துப்பாக்கிச்சூடு
அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டு, டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்ற சில மணி நேரங்களில், வெனிசுலா தலைநகர் கராகஸ்-இல் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதிபர் மாளிகை மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. பல பகுதிகளில் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் ட்ரோன் அல்லது விமான சத்தங்கள் கேட்டதாகவும், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்கா ஈடுபடவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
