ஜெனிவா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் மீது அநியாயமான அழுத்தங்களை செலுத்தி வருகிறார் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் நான்காண்டுகளை எட்டியுள்ள நிலையில், மோதல்கள் தொடர்ந்தாலும் அமைதி பேச்சுக்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், அபுதாபியில் நடந்த இரண்டு சுற்று பேச்சுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது சுற்று பேச்சு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகிறது.
அமைதி ஒப்பந்தத்திற்காக, உக்ரைன் நேட்டோவில் இணைவதை கைவிட வேண்டும், ராணுவ அளவை குறைக்க வேண்டும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு இடையில் அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இது நியாயமான பேச்சாக தெரியவில்லை. ரஷ்யாவுடன் சமரசம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் உக்ரைன் மீது மட்டுமே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், ரஷ்யா மீது அதே அளவு அழுத்தம் காணப்படவில்லை,” என்றார்.
மேலும், “ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு அப்பால் எந்த நிலப்பரப்பையும் விட்டுக் கொடுப்பது உக்ரைன் மக்களால் ஏற்கப்படாது. அத்தகைய முடிவை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்,” என ஜெலென்ஸ்கி உறுதியாக தெரிவித்தார்.
