அதிகாரிகள் பேச்சு என கூறி இடைநிலை ஆசிரியர்கள் கைது; சர்ச்சை
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஐந்து நாட்களாக சென்னை டி.பி.ஐ. வளாகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆறாம் நாளான இன்று (டிச.,31), இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.பி.ஐ. வளாக நுழைவு வாயிலில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயலர் அமுதா மற்றும் சி.பி.எஸ். மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளை போலீசார் அழைத்து, அரசின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் பேசுகையில், “முதல்வரின் முதன்மை செயலர் அனுஜார்ஜ், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோர் பேச்சுக்கு அழைத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அரசாணை வெளியீடும் வரை போராட்டம் தொடரும்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஐந்து மாநில நிர்வாகிகள் போலீசாரின் வாகனத்தில் புறப்பட்டனர். ஆனால், அவர்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து செல்லாமல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, நிர்வாகிகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அதிகாரிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த போதிய நேரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு திரும்பிய ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் கூறுகையில், “இடைநிலை ஆசிரியர்கள் ஆறு நாட்களாக போராடி வருகிறோம். ஆனால், இன்றளவும் எங்களை பேச்சுக்கு அழைக்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லை. அரசும் அதிகாரிகளும் எங்கள் கோரிக்கைகளை அலட்சியமாக கையாள்கின்றனர்” என்றார்.
