குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீட்டெடுத்துள்ளார் என பாராட்டினார்.
அவர் தனது உரையில், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சி பாதையை மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்தார். இந்திய வரலாற்றில் இதுவரை இவ்வளவு நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஒரே நேரத்தில் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தன்னம்பிக்கையை பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளதாக கூறிய முகேஷ் அம்பானி, இந்தியா இன்று புவிசார் அரசியல் கொந்தளிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, நரேந்திர மோடி என்ற வெல்ல முடியாத பாதுகாப்புச் சுவர் காரணம் என தெரிவித்தார். உலக அரசியல் சூழ்நிலையில் உருவாகும் எதிர்பாராத சவால்கள் இந்திய மக்களை பாதிக்க முடியாது என்ற நம்பிக்கையும் இருப்பதாக அவர் கூறினார்.
பிரதமரின் தலைமையின் கீழ் இந்தியா எதிர்காலத்திற்கு தயாராகி வருவதோடு மட்டுமல்ல, அந்த எதிர்காலத்தை தானே வடிவமைத்து வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறினார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆமதாபாத்தில் நடத்தும் பிரதமரின் கனவுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரிலையன்ஸ் குழுமம் ரூ.3.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த முதலீட்டை இரட்டிப்பாக்கி ரூ.7 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் ஒவ்வொரு குஜராத்திக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் அதிக செல்வம் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
