பெர்லின்: ஈரான் அரசு அடக்குமுறைக்கு பதிலாக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஈரானின் தற்போதைய தலைமையகம் தனது இறுதி நாட்கள் மற்றும் வாரங்களை கடந்து செல்வதாகத் தெரிகிறது. அந்த ஆட்சி முடிவை நெருங்கி வருவதாகவும், அரசியல் சட்டப்பூர்வத் தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் தற்போது இந்த ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெற்று வருவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை ஒடுக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பிரெட்ரிக் மெர்ஸ் வலியுறுத்தினார். ஈரான் அரசு அடக்குமுறையை கைவிட்டு, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஈரானுடன் வணிக உறவுகளை பேணும் நாடுகள், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
