அசாம் முன்னேற்றத்தை காங்கிரஸ் விரும்பவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்தை காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கவுகாத்தியில் நடைபெற்ற பகுரும்பா தவோ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக அசாம் மற்றும் பரந்த கிழக்கு இந்தியப் பகுதிகளை காங்கிரஸ் திட்டமிட்டு புறக்கணித்ததாக தெரிவித்தார். உள்ளூர் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அரசியல் லாபத்தையே அவர்கள் முன்னிலைப்படுத்தினர் என்றும், மாநிலத்தில் பிரச்னைகள் உருவாவதற்கே காங்கிரஸ் காரணமாக இருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு மாறாக, பா.ஜ., தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசு அந்த தோல்விகளை திருத்தி, வளர்ச்சிப் பாதையில் அசாமை முன்னேற்றி வருவதாக பிரதமர் மோடி கூறினார். போடோ பகுதிகளுக்காக 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், கோக்ராஜரில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போடோ சமூக நலன்களை பாதுகாக்கும் வகையில் நிர்வாக அமைப்பை வலுப்படுத்த தனி நலத்துறை மற்றும் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அசாம்–டில்லி இடையிலான தூரத்தை பா.ஜ., அரசு குறைத்துள்ளதாகவும், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் மூலம் தொலைதூர பகுதிகளுக்கிடையேயான தொடர்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அசாமின் நம்பிக்கையும் பொருளாதார வளர்ச்சியும் நாட்டின் மொத்த முன்னேற்றத்தை வலுப்படுத்துவதாக தெரிவித்த பிரதமர், மாநிலத்தின் பாரம்பரியமும் கலாசாரமும் உலக அரங்கில் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். ஒருகாலத்தில் வன்முறை அதிகமாக இருந்த அசாம், இன்று தனது கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வண்ணங்களால் ஒளிர்கிறது என்றும் அவர் கூறினார்.
நீண்ட காலமாக நீடித்த அமைதியின்மையை முடிவுக்கு கொண்டு வந்து, கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியதே இந்த மாற்றத்துக்குக் காரணம் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
